தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 3:25 pm

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட காலவரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி இந்திய மீனவர்களால் கடந்த 30ஆம் திகதி தொடக்கம் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஐந்து மீனவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை இரத்து செய்து அவர்களை விடுவிப்பதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணக்கப்பாடுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக  இலங்கை அரசினால் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படக்கூடும் என பல்வேறு தரப்பினரும் கூறியிருந்தனர்.

ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலையீட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பீ.ஜேசுராஜா தெரிவிக்கின்றார்.

மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இன்றுடன் காலவரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மரண தன்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீனவர் விவகாரம் தொடர்பில் சகல தரப்புகளிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் விரைவில் அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா சுட்டிக்காட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்