ஜனாதிபதியின் மூன்றாவது தவணைக் கால தேர்தல் சர்ச்சை; பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள்

ஜனாதிபதியின் மூன்றாவது தவணைக் கால தேர்தல் சர்ச்சை; பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள்

ஜனாதிபதியின் மூன்றாவது தவணைக் கால தேர்தல் சர்ச்சை; பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 1:52 pm

ஜனாதிபதி மூன்றாவது தவணைக் காலத்திற்காகவும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில், எதிர்கட்சியினர் இன்றும் பாராளுமன்றத்தில் வினா எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க சபையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, உயர்நீதிமன்ற வியாக்கியானம் தம்வசம் கிடைத்தவுடன் சபையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

வரவு-செலவுத்திட்டத்தின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இன்றைய குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹாரே, மாகாண சபைகள் மீது அரசாஙகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்தார்.

மாகாண சபை முதலமைச்சர்கள் மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மாகாண சபை மற்றும் ஆளுநருக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றிற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

வட மாகாண சபையை செயலிழக்கச் செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆயினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், உண்மையிலேயே வட மாகாண சபையின் நிர்வாகம் செயற்திறனற்ற ஒன்றாகும் எனக் கூறினார்.

விவாதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் எல்.எம்.அதாவுல்லா பதிலளித்தார்.

நவம்பர் மாதம் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து இருந்து 15,000 ரூபாவாகவும், உப தவிசாளருக்கான கொடுப்பனவு 6,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாகவும், தவிசாளருக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபாவாகவும் ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று நகர சபை உறுப்பினரின் கொடுப்பனவு 7,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாகவும், நகர சபைத் தலைவரின் கொடுப்பனவு 15,000 ரூபாவிருந்து 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதாவுல்லா கூறினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மோட்டர் சைக்கிள் பெற்றுக்கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்