பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் எச்சரிக்கை

பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் எச்சரிக்கை

பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 2:41 pm

பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மயங்கி விழுந்தமை தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை சட்ட வைத்திய அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் பொலிஸாருக்கு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு வட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு, மன்னார் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த சந்தேகநபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விடயமானது மனித உரிமை மீறல் எனவும் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடந்த மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸாரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும், சந்தேகநபர் குறித்து சட்ட வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்