யாழ்ப்பாணத்தில் 27 ஐஸ்கிறீம் கடைகளை திறப்பதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு

யாழ்ப்பாணத்தில் 27 ஐஸ்கிறீம் கடைகளை திறப்பதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:59 pm

யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட ஐஸ்கிறீம் கடைகளில் 27 ஐஸ்கிறீம் கடைகளுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்​லை என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ​ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன் காரணமாக தாம் பொருளாதார ரீதியில் பாரிய கஷ்டத்தினை எதிர்​நோக்குவதாக யாழ். மாவட்ட ஐஸ்கிறீம் கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் குறிப்பிடுகின்றனர்.

யாழ்மாவட்டத்தில் மூடப்பட்ட 59 ஐஸ்கிறீம் கடைகளில் 27 ஜஸ்கிறீம் கடைகளை திறப்பதற்கான அனுமதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக  முன்னெடுத்துவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ​ஆர்.கேதீஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

கடந்த ஒருமாத காலமாக ஐஸ்கிறீம் கடைகள் மூடப்பட்டுள்ளமையால் தாம் வருமானத்தை இழந்து பொருளாதார ரீதியில் பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளதாக மூடப்பட்ட ஐஸ்கிறீம் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐஸ்கிறீம் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐஸ்கிறீம் கடைகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சு தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாக கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சூழ்நிலைக்கான தீர்வினை அறிந்துகொள்ளும் நோக்கில் வெளிநாட்டு விஜயத்திலுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு நியூஸ்பெஸ்ட் பலமுறை முயற்சித்தபோதும் அது பலனிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்