கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; 408 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; 408 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; 408 குடும்பங்கள் வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:40 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கின்ற 102 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிடுகின்றார்.

இந்த மக்களை அருகிலுள்ள வணக்கஸ்தலமொன்றில் தங்கவைத்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி கூறினார்.

இதேவேளை, மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

மண்சரிவு அபாயம் காரணமாக பூனாகலை கீழ் பிரிவைச் சேர்ந்த 129 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அண்மையில் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் பூனாகலை இலக்கம் இரண்டு தமிழ் வித்தியாலயத்திலும், பூனாலை சிவசுப்ரமணிய கோயிலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு எச்சரிக்கை தளர்த்தப்பட்டதை அடுத்து பூனாகலை சிவசுப்ரமணிய கோயிலில் தற்காலிகமாக தங்கியுள்ள 56 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தமது குடியிருப்புகளுக்கு மீள செல்லுமாறு நேற்று கிராம சேவை உத்தியோகத்தர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் அறிவித்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், தமது குடியிருப்புக்கு மீளத் திரும்புவதற்கு அச்சமாக உள்ளதெனவும், குடியிருப்புக்களுக்கு அருகிலுள்ள மலையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, மண்சரிவு அபாயம் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லுமாறு, பூனாகலை கீழ் பிரிவு மக்களுக்கு  ஹல்துமுல்ல 155 பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் அறிவித்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

பூனாகலை கீழ் பிரிவு மக்கள் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பண்டாரவளை பிரதேச செயலாளரும் ஹல்துமுல்லை பதில் பிரதேச செயலாளருமான ஈ.எம்.எஸ்.பீ. ஜெயசுந்தரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பூனாகலை கீழ் பிரிவு மக்களை அவர்களது குடியிருப்புகளுக்கு மீள செல்வதற்கான அறிவிப்புக்கள் இதுவரையில் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பூனாகலை கீழ் பிரிவில் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் குறித்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், மக்களை அங்கு மீள் குடியமர்த்த முடியாத நிலை காணப்படுவதாகவும் பண்டாரவளை பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்