எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து 19ஆம் திகதி தீர்மானம் – ஜாதிக ஹெல உருமய

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து 19ஆம் திகதி தீர்மானம் – ஜாதிக ஹெல உருமய

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:29 pm

தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உருமயவின் பிரதி செயலாளர் உதய கம்மன்பில இந்த கருத்தினை கூறினார்.

இதுவரை காலமும் தங்களின் கட்சி, மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டு வந்ததாகவும், 2010 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் பயணம் தவறான திசையை நோக்கித் திரும்பியுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பயணத்தை மீண்டும் நல்வழிப்படுத்துவதற்காக ஜாதிக ஹெல உருமய செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

5 அல்லது 6 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படாத விடயங்கள், ஒருசில தினங்களுக்குள் நிறைவேறிவிடுமா என இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

தீர்வு காணப்பட வேண்டியிருந்த பாரதூரமான சில பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில பதிலளித்தார்.

அத்துடன் அமைச்சு பதவிகள் மற்றும் சிறப்புச் சலுகைகளை ஒருபோது தமது கட்சி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் பிரதி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்