மீரியபெத்தயில் மீட்புப் பணிகளை இன்றுடன் நிறுத்துவதற்கு தீர்மானம்

மீரியபெத்தயில் மீட்புப் பணிகளை இன்றுடன் நிறுத்துவதற்கு தீர்மானம்

மீரியபெத்தயில் மீட்புப் பணிகளை இன்றுடன் நிறுத்துவதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:10 am

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 37  ​பேர்  காணமற்போனமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதியாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மீரியபெத்த மண்சரிவில் 34 பேர்  காணமாற்போயுள்ளதாக இதற்கு முன்னர் இடர்முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த பகுதியில் வசித்த 33 பேரும் வெளியிடங்களில் இருந்து  அங்கு சென்றிருந்த நான்கு பேரும்  உள்ளடங்களாக மொத்தம் 37 பேர் காணமாற்போயுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த மண்சரிவில் காணாமற் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன..

மண்சரிவு ஏற்பட்ட கடந்த மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது  19 சடலங்கள் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின்  கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இதனைத் தவிர உடற்பாகங்கள் சிலவும் ஒருவரது தலை பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மும்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேரந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணிகளுக்கு பூரண ஒத்தழைப்பை வழங்கியதாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் காணாமற்போன எவரையும் உயிருடன் மீட்கமுடியாமற்போனமை துரதிஷ்டவசமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை மீரியபெத்த  மண்சரிவு காரணமாக பிறப்புச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு அவற்றை வழங்குதற்கு விரைவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.ஏ.குசேகர தெரிவித்தார்.

மண்சரிவு காரணமாக தேசிய அடையாளஅட்டையை இழந்தவர்களுக்கு அவற்றை வழங்குவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக    ஆட்பதிவுத்திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையை  இழந்தவர்கள் பொலிஸ் சான்றிதழுடன்  விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவு  ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கேட்டுள்ளார்

மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள  இம்முறை  சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் பயனுடையதாக அமையும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்