ஜனாதிபதிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை இல்லாமல் செய்தது 18ஆவது திருத்தமே – ரணில்

ஜனாதிபதிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை இல்லாமல் செய்தது 18ஆவது திருத்தமே – ரணில்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 6:07 pm

மூன்றாம் தவணை பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரும் நடவடிக்கையுடன் தொடர்புபடாதிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

 ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்  – ரணில் விக்ரமசிங்க
[quote]ஒரு வேட்பாளருக்கு போட்டியிட முடியாது என்றால் அல்லது அது தொடர்பில் ஆட்சேபனை இருந்தால் வேட்புமனு தாக்கலின் பின்னரே அதனை அறிவிக்க வேண்டும். வேட்பு மனு தா்கலின் பின்னர் அனைத்து சட்டங்களுக்கு அமையவும் ஒரு மணி நேரம் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சேபனை தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணையாளரே அறிவிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணையாளர் அந்த தீர்மானத்தை அறிவித்ததும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோருவதால் அந்த சந்தர்ப்பம் அற்றுப்போகிறது. ஆகையால் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள சுயாதீன கடமைக்கு இந்த நடவடிக்கை சவால் விடுக்கின்றது. நீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் அளவிற்கு பொதுவான தேவை இல்லாததால் ஐக்கிய தேசியக் கட்சி இந்த செயற்பாட்டுடன் தொடர்புபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கூற விரும்புகின்றேன். 18 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு மூன்றாவது தவணைகாலத்தை வழங்கும் நோக்கத்துடனேயே சட்டம் கொண்டுவரப்பட்டது. உண்மையிலேயே அந்த சட்டத்தினால் அந்த வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.  இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதை பாராளுமன்றத்தில் கேட்கவேண்டியுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. எதிர்க்கட்சியில் இருந்தவர்களையும் இழுத்துக்கொண்டு இதனை நிறைவேற்றியுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை தமது தரப்பிற்கு ஈர்த்துள்ளனர். அதன் பிரதிபலனை ஜனாதிபதி அனுபவிக்க நேரிட்டுள்ளது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்