இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக் கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக் கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக் கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2014 | 1:45 pm

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவரையும் மீட்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப் பட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், பழவேற்காடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 15 கிராமத்தவர்கள் திருவள்ளூர் வெளிச்ச வீட்டிற்கு அருகே ஒன்றுகூடி, கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடையடைப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் நேற்றுமுன்தினம் உறுதியளித்திருந்தார்.

இலங்கை நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தாரின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைக்கவுள்ளதாக இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்