மீரியபெத்த மண்சரிவு; முச்சக்கரவண்டி ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்பு

மீரியபெத்த மண்சரிவு; முச்சக்கரவண்டி ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்பு

மீரியபெத்த மண்சரிவு; முச்சக்கரவண்டி ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:16 am

கொஸ்லாந்தை மீரியபத்த தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின்போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மண் சரிவால் காணாமற்போயிருந்த ஒருவரது சடலமும் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் காணாமற்போன அனைவரது தகவல்களும் உறுதி செய்யப்படும் வரை தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நிலவிய சீரற்ற வானிலை மீட்புப் பணிகளுக்கு தடையாக அமைந்ததென மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனவர்களை தேடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை, மண்சரிவு அபாயம் மற்றும் கடும் மழையால் மலையத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இதுவரை மூவாயிரத்து 800 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதய குமார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 525 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரது 346 பேர்  இருப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்காக 21 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்