சதமடித்த ‘கத்தி’; 100கோடி வசூல்

சதமடித்த ‘கத்தி’; 100கோடி வசூல்

சதமடித்த ‘கத்தி’; 100கோடி வசூல்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 2:41 pm

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘கத்தி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. கத்தியின் இசையமைப்பாளர் அனிருத் இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘கத்தி’ திரைப்படத்தில் விஜய் நடித்தார். பல சர்ச்சைகளுக்கு இடையே தீபாவளி அன்று வெளியான கத்தி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் கதை திருட்டு குறித்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, தற்போது ‘கத்தி’ ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகச் சிறப்பான நாள் இது. வேகமாக 100 கோடியை தொட்டது கத்தி (தமிழ்நாட்டில் 65.1 கோடி, வெளிநாடுகளில் 20.2 கோடி, பிற மாநிலங்களில் 15.4 கோடி, மொத்தம் 100.7 கோடி)” எனப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் முருகதாஸின் முந்தைய படங்களான ‘துப்பாக்கி’, அதன் இந்தி பதிப்பான ‘ஹாலிடே’ ஆகிய இரு படங்களும் 100 கோடி வசூலைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக 100 கோடி வசூலை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்துள்ளார்.

அடுத்து, தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மௌனகுரு’ படத்தின் இந்தி பதிப்பை, நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் இயக்குகிறார் முருகதாஸ்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்