கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; நாட்டின் பல பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம்

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; நாட்டின் பல பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 9:38 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மண்சரிவில் காணாமற்போனவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும், அதுகுறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரி, பொகவந்தலாவை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பொகவந்தலாவை, செல்வகந்தை, கொட்டியாகலை, குயினா, பொகவான, டின்சின் மற்றும் சீனாக்கொலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, லிந்துலை – தங்ககலை பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களுக்கான வீட்டுரிமையை பெற்றுத் தருமாறும், மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மக்களை அனுமதிக்குமாறும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கேம்பீரிஜ், தங்ககலை, எல்ஜின், வெள்ளிகலை மற்றும் ஊவாகலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, மாத்தளை நகரிலும் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டதுடன், விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

தலவாக்கலை நகரிலும் அஞ்சலி நடவடிக்கைகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகோவத்தை நகரிலும் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஸ்கெலியா – சாமிமலை பகுதியிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தம்பேதென்ன தோட்ட மக்கள் அமைதி ஊர்வலமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தம்பேதென்ன தோட்டத்தின் 4 பிரிவுகளை சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தோட்ட நிறுவனங்களினால் இன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த சம்பளத்துடன் மேலும் ஒரு தொகை பணத்தை சேகரித்து, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவும் தம்பேதென்ன மக்கள் இன்று தீர்மானித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்