கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் மூவரின் சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் மூவரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:43 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போன மேலும் மூவரின் சடலங்களை பாதுகாப்பு பிரிவினர் இன்று மீட்டுள்ளனர்.

மீரியபெத்த பகுதியில் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகள் இன்று ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.

மீட்புப் பணிகளில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கொஸ்லாந்தை பகுதியில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவிய போதும், மீட்புப் பணிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இன்று மீட்கப்பட்ட சடலங்களில் 9 மாதக் குழந்தையின் சடலமும் காணப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி, கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நாளை பிற்பகல் 5.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்