மீரியபெத்த மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை

மீரியபெத்த மண்சரிவு; 63 வீடுகள் சேதம்,148 பேரை தொடர்ந்தும் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 7:00 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் 63 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவினால் 148 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்

மீரியபெத்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 808 பேர் பாதுகாப்பான இரண்டு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதிகள், நீர், உணவு போன்ற மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

இதன்பொருட்டு இடர் முகாமைத்துவ அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்புடன் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களை சேர்ந்த சுமார் 330 பேர் வாழ்ந்தமை தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவின் காரணமாக அநாதரவான சிறுவர்கள் குறித்து 1 9 2 9 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற பேரழிவுகளின்போது சிறுவர்களை கடத்திச் செல்லல் உட்பட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட பிள்ளைகள் குறித்து தகவல்களை சேகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிடுகின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று மண்சரிவினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்