ஊவாவில் பல பகுதிகளில் மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

ஊவாவில் பல பகுதிகளில் மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

ஊவாவில் பல பகுதிகளில் மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:50 am

எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டதாக நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

இதனிடையே பதுளு ஓயா பெருக்கெடுத்துள்ளமையால் பதுளை பிரதேச செயலக பிரிவில் சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயந்துள்ளதாகவும் ஈ.எல்.எம்.உதயகுமார குறிப்பிடுகின்றார்.

இதன் காரணமாக 300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, எல்ல – தெமோதர பகுதியூடான ரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பிலுருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மலையக மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து இன்றைய தினம் பண்டாரவளை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் சீரற்ற வானிலைக் காரணமாக நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக நிலையத்தின் மண்சரிவு முன் எச்சரிக்கை பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

பசறை, லுணுகல, பதுளை, ஸ்பிரிங்வெளி, ஹப்புத்தளை – பெரகல வீதி, எட்டம்பிட்டிய – வெலிமடை வீதி மற்றும் எல்ல – வெல்லவாய வீதிகளில் ஆகிய மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக தற்போதைய நிலவரங்களின் படி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாகவும் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழையினால் பசறை  – நமுனுகுல வீதியில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

மேலும், ஹப்புத்தலை தொட்லாகல – பூனாகல வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுகளிலே மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முன் எச்சரிக்கை பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்