ஜவ்ஹாருக்கு சுவிஸர்லாந்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்துக!

ஜவ்ஹாருக்கு சுவிஸர்லாந்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்துக!

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2014 | 7:25 pm

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் பணியாற்றிய யூ.ஜவ்ஹாருக்கு சுவிஸர்லாந்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தை வௌிவிவகார அமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தமாரா குணநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பு செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறித்த கடிதத்தை மேற்கோள்காட்டி அறிக்கை வௌியிட்டிருந்தார்.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பு செய்வது தொடர்பான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 21ஆம் திகதி அறிக்கையொன்றின் மூலம் பதில் வழங்கியிருந்தார்.

இதேவேளை, வௌிவிவகார அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று இராஜதந்திர ரீதியில் கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதில்லை என தமாரா குணநாயகம் தெரிவித்தார்.

 

இந்நிலையில்,  இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலப் பகுதியில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பல அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க அடிக்கடி ஜெனிவாவிற்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுபற்றிப் பேச மறுத்துவிட்டார்.

[quote]முடியாது…. முடியாது….  வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பேசுவதற்கே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நாம் அது குறித்து தனியாக பேசுவோம். எமது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அருகில் வைத்துக்கொண்டு பேசுவோம். நீங்கள் எதற்குத் தயாராகி வந்தீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். [/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்