வரவு-செலவுத்திட்டம் மூலம் மக்களின் தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை- தொழிற்சங்கங்கள்

வரவு-செலவுத்திட்டம் மூலம் மக்களின் தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை- தொழிற்சங்கங்கள்

வரவு-செலவுத்திட்டம் மூலம் மக்களின் தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை- தொழிற்சங்கங்கள்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 9:26 am

வரவு-செலவுத்திட்டம் ஊடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என பல்வேறு துறைசார்ந்த தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டம் ஒரு ஏமாற்றுத் திட்டம் என தேசிய தொழிற்சங்க நிலையத்தின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார்.

தொழில்புரியும் வர்க்கத்தினர் கோரிய சம்பள அதிகரிப்பு அதில் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டிலும் நாட்டின் உற்பத்தித் துறைக்கு பெரும் பங்காற்றுகின்ற பாரிய தொழில் வர்க்கத்தினராகிய தனியார் துறை ஊழியர்களை ஏமாற்றும் வகையில் வரவு-செலவுத்திட்டத்தில் கண்கட்டு வித்தை அரங்கேற்றப்பட்டுள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

வரி மற்றும் கட்டண அதிகரிப்புகள் தனியார் துறை ஊழியர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகளும், கொடுப்பனவு அதிகரிப்புகளும் தனியார்த்துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தேசிய தொழிற்சங்க நிலையத்தின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனில், நாட்டிலுள்ள தனியார்த்துறை ஊழியர்களை இந்த கண்கட்டு வித்தை வரவு-செலவுத்திட்டத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக அணிதிரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை வரவு-செலவுத்திட்டம் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொடுப்பதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் போக்குவரத்து துறையிலிருந்து அரச ஊழியர்கள் விலகிச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த ஐந்து கோரிக்கைகளில், மூன்றிற்கு இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

ஆயினும், தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்காவிட்டால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறினார்.

இதேவேளை, இந்த வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக ஆசிரியர் – அதிபர் தொழில்களின் எதிர்ப்பார்ப்புகள் அற்றுப் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அது இரண்டாயிரத்து 200 ரூபாவினால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்கான ஒதுக்கீடுகள் குறித்தும் வரவு-செலவுத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என அவர் கூறினார்.

அதேபோன்று கல்வித் துறைக்காக தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்குவதாக முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலும், இம்முறை கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எந்த வகையிலும் போதுமானதாக இல்லையென ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஆசிரியர், அதிபர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர்த்துப் போகச் செய்துள்ள ஒரு வரவு-செலவுத்திட்டமாகவே இதனை தமது சங்கம் நோக்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தலொன்றை இலக்காகக்கொண்டதாக இம்முறை வரவு-செலவுத்திட்டம் காணப்படுவதாக அரச, அரை அரச மற்றும் தனியார் துறைசார் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவிக்கின்றார்.

வாழ்க்கைச் செலவு மற்றும் சேவைகள் கட்டண அதிகரிப்புக்கு ஏற்றவாறு பத்தாயிரம் ரூபாவினால் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்