தமிழக மீனவர்கள் 24 ​பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 24 ​பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 24 ​பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 1:30 pm

வடபகுதி கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் 24 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

24 தமிழக மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த மீனவர்களின் 05 படகுகளை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் ராமேஷ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ஜெகதாத்பட்டிணம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 24 மீனவர்களே தொடர்ந்நதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் 79 படகுகள் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ். சதாசிவம் தெரிவிக்கின்றார்.

மேலும் 51 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் 21 படகுகள் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், விசைப் படகுகள் விடுவிக்கப்படாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவ பிரதிநிதிகள் சுப்ரமணியன் சுவாமியிடம் கூறியுள்ளதாக தஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை நெருங்கிவரும் நிலையில் இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் காணப்படுவதாகவும் தமிழக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன், இலங்கை அரசாங்கத்திடமும் அதுகுறித்து வலியுறுத்துவதாகவும் சுப்ரமணியன் சுவாமி உறுதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்