ஐ.தே.க, ம.வி.மு பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஐ.தே.க, ம.வி.மு பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஐ.தே.க, ம.வி.மு பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 8:04 pm

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் சிலர் இன்று முற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் உபதலைவர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலர் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறவுள்ள திகதியை பகிரங்கமாக அறிவிப்பது சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் உரிமையாகும் என ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பதவியிலிருந்து தயானந்த திசாநாயக்க, முழுமையான திகதி விபரங்களை அறிவித்து, தாம் சுயாதீனமான தேர்தல்கள் ஆணையாளர் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்ததாக ரவி கருணாநாயக்க கூறினார்.

எனவே இத்தகைய பொறுப்பான பதவியிலிருந்துகொண்டு அதன் சுயாதீனத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாரிடம் கேட்டுக்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலரும் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து மஹஜர் ஒன்றை கையளித்தனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரில்வின் சில்வா, ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாக போட்டியிடுதல் மற்றும் அரசியலமைப்பில் உள்ள திருத்தத்திற்கு உட்படுத்தப்படாத சில விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்