புத்தளம் நகரை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம்

புத்தளம் நகரை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம்

புத்தளம் நகரை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 6:28 pm

புத்தளம் நகரை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் ஏழு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் வாகனப் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

பலத்த காற்றினால் அனுராதபுரம் – புத்தளம் மற்றும் புத்தளம் – குருநாகல் ஆகிய வீதிகளின் சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் வீதியில் விழுந்து மரங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

ஆயினும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக 11 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கம்பளை ஸாஹிரா கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் அந்த வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்த வீடுகளில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பூஜாப்பிட்டிய பகுதியிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த நிலைமைகளின் கீழ், பலத்த மழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றிரவு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்