79 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது

79 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது

79 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 9:30 am

79 இலங்கை மீனவர்கள்  வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
அவர்களின் 28 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

4 படகுகளுடன் 24 இலங்கை மீனவர்கள் கடந்த வாரம் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  24 மீனவர்களும் பங்களதேஷ் கரையிலிருந்து 200  கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. வெளிவிவகார அமைச்சினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படுமாயின்  அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என  பதில் உயர்ஸ்தானிகர் ஏ.ஜி.அபேசேகர தெரிவித்தார்.

இருந்த போதிலும் உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை தமக்கு கிடைக்கபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டுள்ள 24  மீனவர்கள் நாளை பங்களாதேஷ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பங்களாதேஷில் உள்ள இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் ஏ.ஜீ.அபேசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை 3 படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் எச்.ஆர்.பியசிறி குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மீனவர்கள் 40 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவர்களின்  21 படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த மீனவர்களை விடுவிப்பதற்கு தூதரகத்தின் ஊடாக தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அண்டை நாடுகளின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்