ஜெனீவா ஒப்பந்தத்தை முதன்முறையாக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம்; விமல் தரும் விளக்கம் என்ன? (Special Report)

ஜெனீவா ஒப்பந்தத்தை முதன்முறையாக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம்; விமல் தரும் விளக்கம் என்ன? (Special Report)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 9:31 pm

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தம் எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் தொடர்புப்பட்ட நிதி நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமையை அரசாங்கம் இன்று முதற் தடவையாக ஏற்றுக் கொண்டது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸூடன் தொடர்புக் கொண்டு இது குறித்து தகவல்களை கேட்டறிந்து அதனை உறுதிப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் கூறினார்.

விமல் வீரவங்ச – அமைச்சர்
[quote]நாம் இது குறித்து ஆராய்ந்தோம். வெளிவிவகார அமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பில் கேட்டோம். அவர் அதனை தெளிவாக கூறினார். குறிப்பிடப்படும் அந்த வாசஸ்தலத்திற்கான ஒப்பந்தம் தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவுள்ளவர், ஜெனீவா அலுவலகத்தில் பதவி வகிக்க முன்னரே, அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு வெளிவிவகார அமைச்சர் கூறிய விடயங்கள். இவ்வாறான ஒரு சம்பவம் கேள்வியுற்றதுடன், நாம் இது குறித்து ஆராய்கின்றோம். இதன் மாற்றங்கள் தொடர்பில் தேடிப் பார்க்கின்றோம். கடந்த காலங்களில் ஷெனுக்காவின் அலுவலகம் தொடர்பிலான ஒப்பந்தம் தொடர்பில் கதைப்பவர்கள், ஐரோப்பிய ஒன்றியம், எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீக்கும் போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்.[/quote]

கேள்வி
01. யார் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியது.? எந்த அடிப்படையில்?
02. புனரமைப்பு பணிகள் இடம்பெறும் போது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தவர்கள் யார்?
03. கட்டண பட்டியலுக்கு அனுமதி வழங்கியது யார்?
04. அதில் கையொப்பமிட்டவர்கள் யார்?
05. ஒப்பந்தத்தை வழங்குவதற்கு பொறுப்புடையவர் யார்?

தமாரா குணநாயகம்
[quote]அந்த ஆவணங்களை நான் பார்த்துள்ளேன். அதன் போதே எனக்கு விடயங்கள் தெளிவானது. வாசஸ்தலத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று அதற்கான மதிப்பீடும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனக்கு முன்னர் ஷெனுக்கா செனவிரத்னவே அங்கு உயர்ஸ்தானிகராக இருந்தார். நான் இது தொடர்பில் வினவியபோது இரண்டு விடயங்கள் வெளியாகின. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிறுவனம் ஒரு நிதி நிறுவனமாகும். கட்டட நிர்மாண நிறுவனமாக அது இருக்கவில்லை. அதேபோன்று அதுவொரு ஜெனீவாவின் நிறுவனமும் அல்ல. அந்த நிறுவனத்தின் தலைமை உறுப்பினர்கள் எல்.டி.டி.ஈயினர் என எனக்கு அறியக் கிடைத்தது. எனவே இது தொடர்பில் வினவியபோது எனக்கு இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலாவது பாதுகாப்பு பிரச்சினையாகும். [/quote]
இதேவேளை, ஜெனீவாவின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க இன்று நியூஸ்லைன் செவ்வியில் இது குறித்து கருத்து வெளியிட்டார்.

கேள்வி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சரான விமல் வீரவங்ச இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். ஷெனுக்கா செனவிரத்ன அங்கு நிரந்தர வதிவிட பிரதிநிதியாக செயற்படுவதற்கு முன்னரே ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்கும் பணிகள் எல்.ரி.ரி.ஈ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். நாம் அறிந்த விதத்தில் ஷெனுக்காவிற்கு முன்னர் நீங்களே அங்கு நிரந்தர வதிவிட பிரதிநிதியாக செயற்பட்டீர்கள்.

பதில்
[quote]2007ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை நான் அங்கு பணியாற்றினேன். அந்த காலப் பகுதியில் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நான் முயற்சிக்கவில்லை. அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்படவும் இல்லை. நாம் பெரும் போராட்டத்தில் அங்கு ஈடுபட்டிருந்தோம். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளை தடுப்பதற்காக நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். 2009ஆம் ஆண்டு தோற்கடித்தோம். 11,000 ரூபா அடிப்படை சம்பளத்திலேயே அனைவரும் அங்கு பணி புரிந்தனர். அதன் பிரதிபலனாகவே என்னை 2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி நீக்கினர்.[/quote]

கேள்வி –
நீங்கள் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீக்கப்பட்டுள்ளீர்கள்?

பதில்
[quote]ஜூலை 16ஆம் திகதி எனக்கு தொலைநகல் ஒன்று கிடைத்தது. அதன்மூலம் என்னை நீக்கினர். ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் நான் மீண்டும் இலங்கைக்கு வந்தேன். எனினும், உயர்ஸ்தானிகராக ஷெனுகா செனவிரத்ன செயற்படுகையில், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்யும் முயற்சியின் ​போது, அதிகளவான கட்டண பட்டியல்கள் கிடைத்ததாக ஏசியன் ரிபியூன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்னை ஜூலை மாதம் நீக்கினர். அதன்பின்னர் ஷெனுகா செனவிரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இடம்பெறவுள்ள விடயங்களை சிலர் 2008ஆம் ஆண்டே அறிந்துள்ளனர். தவறான தீர்மானமொன்றை எடுப்பதற்கு செயற்பட்டவர்களும் விமல் வீரவங்ச உள்ளிட்டவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். எனக்கு பிறகு ஷெனுகா செனவிரத்னவுக்கு அங்கு செயற்பட முடியாது என்பது ஜனாதிபதிக்கு புரிந்தது. 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமாரா அங்கு சென்றார். செப்டம்பர் மாதம் அமெரிக்கா பிரேரணையை கொண்டுவர முயற்சித்தது. அதனை தமாரா நிறுத்தினார். அதற்கு கிடைத்த பரிசு என்ன? தமாராவையும் நீக்கினர்.

தமாரா கூறிய விடயங்களையும், ஐரோப்பிய நீதிமன்றம் புலிகளின் மீதான தடையை நீக்கியமையையும் ஒன்றிணைத்து கூற முயற்சிக்கின்றனர். இதுவொரு எல்.ரி.ரி.ஈயின் சதித் திட்டம் என்று கூறுகின்றனர். எல்.ரி.ரி.ஈயினர் சதித்திட்டம் தீட்டினாலும், பட்டம் பெறாத ஒருவரை எவ்வாறு கண்காணிப்பு உறுப்பினராக நியமிப்பர்? சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பிரச்சினைகளை தான் பார்ப்பதில்லை என சஜின் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவர் எவ்வாறு ஆலோசனைகளை வழங்குகின்றார். அவருக்கு இருக்கும் அறிவு என்ன? கல்வி அறிவு தான் என்ன? சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவருக்கு இருக்கும் அனுபவம் தான் என்ன? [/quote]
தயான் ஜயதிலக்க ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வரை அப்பதவியில் அவர் இருந்ததுடன், அதனை அடுத்து தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவுள்ள ஷெனுகா செனவிரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அவர் இரண்டு வருடங்கள் பதவி வகித்ததுடன், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமாரா குணநாயகம் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

வசந்த சமரசிங்க
[quote]சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஷெனுகா செனவிரத்ன பதவியேற்ற திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஷெனுகா செனவிரத்ன பதவியேற்றுள்ளார். [/quote]

வசந்த சமரசிங்க குறிப்பிடுவதை போன்று குறித்த உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகளுக்காக எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் தொடர்புடைய நிதி நிறுவனத்திற்கு 2009ஆம் ஆணடு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வழங்கப்டப்டுள்ளது. அதாவது ஷெனுகா செனவிரத்ன பதவியேற்று இரண்டு நாட்களுக்கு பின்னரே இது இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்