அடிப்படை வசதிகள் இன்மையால் அழிவினை எதிர்நோக்கியுள்ள ‘கப்பாச்சி’ கிராமம்

அடிப்படை வசதிகள் இன்மையால் அழிவினை எதிர்நோக்கியுள்ள ‘கப்பாச்சி’ கிராமம்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 9:51 pm

வடக்கில் உள்ள மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மீள்குடியேற்றம் ஆரம்பிக்க நிலையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கான வீடுகள் இன்னமும் அமைக்கப்படாத நிலையில் குறித்த மக்கள் தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் 16 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதும் குறித்த மக்களுக்கு வீட்டுத் திட்டம் மறுக்கப்படுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக தற்காலிக வீடுகளில் வசித்து வரும் தாம் மழைக்காலங்களில் சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட 16 வீட்டுத்திட்ட மக்கள் கடந்த 20 வருடங்களாக குறித்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

மிகவும் பின் தங்கிய நிலையில் வசிக்கும் இந்த மக்கள் தமக்கான வீட்டுத்திட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

அடிப்படை வசதிகளேதுமின்றி மீள்குடியேற்றப்பட்ட வவுனியா கப்பாச்சி கிராம மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியறேும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கப்பாச்சி கிராமம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

95 குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் மக்கள் 1977 ஆம் ஆண்டு குடியேறியிருந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மடு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

இந்தக் கிராமத்தில் குடிநீர், போக்குவரத்து வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

இது மாத்திரமின்றி குளக்கட்டினை மாத்திரம் பிரதான வீதியாக கொண்டமைந்த இக் கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதிகற்ற நிலையில் இந்தக் கிராம மக்கள் தமது கிராமத்தை விட்டு மெல்ல மெல்ல வெளியேறி வருவதனால் பல வீடுகள் தற்போது பற்றைகள் மண்டி காட்சி அளிக்கின்றன.

எனவே தமது கிராமத்தை அழிவில் இருந்து காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கப்பாச்சி கிராம மக்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்