விடுதலையான ஜெயலலிதாவுக்கு அமோக வரவேற்பு

விடுதலையான ஜெயலலிதாவுக்கு அமோக வரவேற்பு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 6:39 pm

பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து தமிழகம் திரும்பிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஜெயலலிதா ஜெயராமை விடுவிப்பதற்கான உத்தரவை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கள் டி குன்ஹா இன்று மதியம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த தீர்ப்பை அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கல் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா ஜெயராம், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் பெங்களூர் பார்ப்பன ஆக்ரஹார சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறினர்.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னையை சென்றடைந்த ஜெயலலிதாவை வரவேற்பதற்காக கடும் மழையையும் பொருட்படுத்தாது 13 கிலோமீற்றர் தூரம் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சொத்து குவிப்பு வழங்கில்   ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 27ஆம் திகதி சிறைதண்டனை விதித்ததை அடுத்து 22 நாட்கள் அவர்கள் பெங்களூர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்திய உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வருக்கும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இடைக்கால பிணை வழங்கி இந்திய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று மதியம் ஜெயரலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வர் சார்பிலும் எட்டு பேர் பிணை உத்தரவாதம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, தமிழகத்தின் முன்ளாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிணையில் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார் என பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதனை புரிந்துக்கொள்ளாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மை நிலை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு மனுவில் தனக்கு வெற்றிகிடைக்கும் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று மாலை விடுத்திருந்த அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
conta[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்