கொத்மலை மோதல் குறித்து 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கொத்மலை மோதல் குறித்து 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கொத்மலை மோதல் குறித்து 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 6:35 pm

கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் இதுவரை பத்து பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், மேலும் சிலரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாக்குமூலங்கள் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கொத்மலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், தேவையேற்படின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அந்த பொலிஸ் உயரதிகாரி மேலும் கூறினார்.

கொத்மலை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றபோது, அபிவிருத்திக் குழுவின் தலைவரான பிரதியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், அவரது மகனான மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினரான எம்.ரமேஷ் ஆகியோரிடையே வாக்குவாதம் இடம்பெற்றது.

இதனையடுத்து பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையில் பிரதியமைச்சர் அதனை காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சரின் செயலாளர் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் தரப்பிலும், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ் சார்பிலும் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, தன்னையும், தனது மகனான மாகாண சபை உறுப்பினர் ராஜாராமையும் இலக்கு வைத்து நடத்திய தாக்குதலிலேயே தமது செயலாளர் காயமடைந்ததாக பிரதியமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் கொத்மலை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்