‘கனவுகள் மலரட்டும்’ அப்துல் கலாமின் 83ஆவது பிறந்த தினம் இன்று

‘கனவுகள் மலரட்டும்’ அப்துல் கலாமின் 83ஆவது பிறந்த தினம் இன்று

‘கனவுகள் மலரட்டும்’ அப்துல் கலாமின் 83ஆவது பிறந்த தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 12:22 pm

”கனவுகள் மலரட்டும்! கனவுகள் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன” என்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று மாணவர்களையும், இளைஞர் களையும் எழுச்சியூட்டி வருபவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

இன்று அவரது 83ஆவது பிறந்த தினம்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் படகோட்டியின் மகனாக 1931 அக்டோபர் 15ஆம் திகதி பிறந்தார். பாடசாலை நாட்களில் தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடுவீடாகச் சென்று காலை வேளையில் பத்திரிகை போடும் வேலையைக்கூட செய்துள்ளார். கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது, தனது நகைகளை அடகு வைத்து அவரை கல்லூரியில் சேர்த்துவிட்டவர் அவரது சகோதரி அஸ்மா.

1958ஆம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் முதன்முதலாக பணியில் சேர்ந்தபோது கலாமின் சம்பளம் 250 ரூபா (இந்திய ரூபாய்) பின்னர் தனது கடின உழைப்பால் 1980ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் முதல் திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் திட்ட இயக்குனராக கலாம் பணியாற்றினார்.

1998 மே 11ஆம் திகதி பொக்ரானில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கலாம் நடத்திய அணுகுண்டு சோதனைக்குப் பின் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா மீது திரும்பியது.

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது.

தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார்.

இந்தியா ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும் என்று இளையதலைமுறைக்கு கோரிக்கை விடுக்கும் கலாமுக்கும் நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

இராமேஸ்வரத்தில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கற்க வசதியின்றி 12ஆம் தரத்துடன் கல்வியை கைவிடுகின்றனர், இந்நிலையில் இராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி ஒன்றைய நிறுவ வேண்டும் என்பதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்