ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு; கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு (Special Report)

ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு; கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு (Special Report)

ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு; கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு (Special Report)

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 3:44 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பிணை வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது.

ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வருக்கு பிணை வழக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டன.

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த பிணை மனுக்கள் தசரா விடுறையால் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தும் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிணை மனுவை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா ஜெயராமிற்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க முடியுமென வாதிட்டார்.

அத்துடன் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நலத்தை கருத்திற்கொண்டு, அவருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி பவானி சிங், ஜெயலலிதா ஜெயராம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டால், அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா ஜெயராம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயற்படக் கூடியவர் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 1.20 தொடக்கம் ஒரு மணித்தியாலம் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிற்பகல் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி பவானி சிங் கூறியிருந்தார்.

இந்த அறிவித்தலை அடுத்து அநேகமான இந்திய ஊடகங்கள் ஜெயலலிதா ஜெயராமை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவித்துள்ளதாக செய்தி வெளியிட்டன.

இதனையடுத்து சென்னையிலுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையகம் மற்றும் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் காடன் வாசஸ்தலம் ஆகிய இடங்களில் இனிப்புக்களை விநியோகித்தும் பட்டாசு கொழுத்தியும் கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த செய்தி வெளியாகி ஒரு சில நிமிடங்களில் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மீண்டும் செய்திகளை வெளியிட்டன.

ஜெயலலிதா ஜெயராம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதி அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் வீதிகளில் திரண்டு தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

இதேவேளை, பிணை மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, புதுடெல்லியிலுள்ள உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

இதேவேளை, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரோடு நான்கு நான்கு வருட சிறைதண்டனையும் தலா 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்ட  சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்