ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 1:40 pm

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு பிணை வழங்குமாறு கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை பிற்பகல் 2.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை, இன்றைய தினத்திற்கான முதலாவது மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இதற்கமைய, வழக்கு வரிசை எண்ணுக்கு அமைய, கர்நாடகா உயர் நீதிமன்றத்திலே ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா ஜெயராமிற்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க முடியுமென வாதிட்டுள்ளார்.

அத்துடன் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நலத்தை கருத்திற்கொண்டு, அவருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி பவானி சிங், ஜெயலலிதா ஜெயராம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டால், அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா ஜெயராம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயற்படக் கூடியவர் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணையை அடுத்து, அவரது தோழியான சசிகலா சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜெலலிதா ஜெயராமுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைதண்டனையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்