ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்

ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 1:24 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புதுவையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு புதுச்சேரி அதிமுக செயலாளர் ஏ. ரவூந்திரன் அறிவித்தல் விடுத்திருந்தார்.

இதன் பிரகாரம் இன்று காலை முதல் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக மாநில செயலாளர் தலைமையிலான 20 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தஹிந்து குறிப்பிடுகின்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதா ஜெயராமுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு வருட சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபா அபராதமும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்