அதிகமான தேர்தல்கள் தனது ஆட்சிக்காலத்திலேயே நடத்தப்பட்டுள்ளது-ஜனாதிபதி

அதிகமான தேர்தல்கள் தனது ஆட்சிக்காலத்திலேயே நடத்தப்பட்டுள்ளது-ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 1:36 pm

இலங்கையில் ஆகக்கூடிய தேர்தல்கள் தமது ஆட்சிக்காலத்திலேயே நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாட்டில் ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இதன்மூலம் தெளிவாவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வத்திகானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இத்தாலியின் ரோம் நகரிலும், ஐரோப்பாவிலும் வாழ்கின்ற இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோதே இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு நாட்டிற்குள்ளேயே தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், அதில் தலையிடுவதற்கான எவ்வித பண்பாட்டு ரீதியான உரிமையும் சர்வதேச சமூகத்திற்கு இல்லையெனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விடயங்களில் தலையிடுவதன் ஊடாக, நாட்டில் ஸ்திரமின்மையை தோற்றுவிப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எதிரான போலியான பிரசாரங்களையும், கருத்துகளையும் தோற்கடிப்பதற்கும், இலங்கையின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் முன்வருமாறு இலங்கை சமூகத்தினரிடம் ஜனாதிபதி ​கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிசை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று சந்தித்தார்.

இதன்போது பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை ஜனாதிபதி விடுத்ததிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்