மனித உரிமைகள் தொடர்பான விசாரணையில் இலங்கைக்கு 22 நாடுகள் ஆதரவு

மனித உரிமைகள் தொடர்பான விசாரணையில் இலங்கைக்கு 22 நாடுகள் ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 6:56 pm

மனித உரிமைகள் தொடர்பான விசாரணையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து, 22 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை விடுத்துள்ளன.

மனித உரிமைகள் பேரவையில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், குறித்த 22 நாடுகளும் இந்த பதிலை வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உள்ள சிறப்புரிமைகளின் பிரகாரம், இலங்கைக்கு எதிராக பலவந்தமான முறையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்திர வதிவிட பிரதிநிதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் உள்ளக கட்டமைப்புக்களின் ஊடாக, மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக 22 நாடுகளின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதேனுமொரு நாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின், அந்த நாட்டின் அனுமதியுடன் அது முன்னெடுக்கப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22 நாடுகளை உள்ளடக்கிய இந்தக் குழுவிற்கு எகிப்து தலைமைத்துவம் வகிக்கின்றது.

இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்கவிடம், நியூஸ் பெஸ்ட் அலுவலகச் செய்தியாளர் நதீம் மஜிட் வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அவர், இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்ட விடயம் மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும், அந்த 22 நாடுகளில் 07 நாடுகள் மாத்திரமே ஐநா அமைப்பின் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டன என தயான் ஜயதிலக்க கூறினார்.

அந்த 07 நாடுகளுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடந்த மார்ச் மாதம் நிரந்தர உறுப்புரிமையை கொண்ட 12 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது அந்த நாடுகள் 07 ஆக குறைவடைந்துள்ளமை பாரியதொரு பின்னடைவு என அவர் தெரிவித்தார்.

அத்துடன், பிறிக்ஸ் நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யா ஆகியன மாத்திரமே ஆதரவாக செயற்படுவதுடன், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகியன நடுவுநிலைமையுடன் செயற்படுவதாக தயான் ஜயதிலக்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்