‘சீ.வி.வேலுப்பிள்ளை’ நூறாவது ஜனன தின விழா (Video & Photos)

‘சீ.வி.வேலுப்பிள்ளை’ நூறாவது ஜனன தின விழா (Video & Photos)

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 9:34 pm

மலையக இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ‘மக்கள் கவிமணி’ என அழைக்கப்படுபவருமான சீ.வி.வேலுப்பிள்ளையின் நூறாவது ஜனன தின விழா இன்று ஹட்டனில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சீ.வி.வேலுப்பிள்ளையின் நூறாவது ஜனன தின நிகழ்வின் நினைவாக அவரது நிழற்படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதன்போது சி.வி.வேலுப்பிள்ளை இதழாசிரியராக  செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் இருமாத இதழான ‘மாவலி’யின் சீ.வி சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

அண்மையில் மறைந்த மலையக எழுத்தாளர் சாரல்நாடன் எழுதிய ´இலங்கைத் தமிழ் மணிச்சுடர் – சீ.வி.வேலுப்பிள்ளை´ எனும் நூலின் பிரதிகளை பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.

1914ஆம் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் வட்டகொடை நகருக்கு அண்மையில் உள்ள மடக்கும்புரை தோட்டத்தில் பிறந்த கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை இலங்கை சுதந்திர நாடாளுமன்றத்தின் (1947ஆம் ஆண்டு) உறுப்பினர், இலங்கை இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மதியுரைஞர், நிர்வாகப் பொறுப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

ஆசிரியராக, தொழிற்சங்கவாதியாக, கவிஞராக, நாவலாசிரியராக, பத்திரிகையாசிரியராக பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கினார் சீ.வி.வேலுபிள்ளை.

விழாவிற்கு வருகை தந்த அனைவரும் சீ.வி.அவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியதோடு நினைவுப் பதிவேட்டில் கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது.

 

8 7 6 5 4 2 1 unnamed

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்