தேர்தலின் பின்னர் ஊவாவில் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் பதிவு

தேர்தலின் பின்னர் ஊவாவில் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 9:11 pm

ஒருசில சம்பவங்களைத் தவிர ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் பின்னர் அமைதியான சூழ்நிலை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேர்தலின் பின்னரான இரண்டு வன்முறைச் சம்பவங்கள் தமது அமைப்பிற்கு பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார்.

ஹப்புதலை, யஹலபெத்த பகுதியில் வாக்குச் சாவடியில் இருந்த மக்கள் விடுதலை முன்னணி முகவர் மீதான தாக்குதல் குறித்து நேற்று மாலை பதிவாகியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்ட மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தரப்பினர் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தமது அமைப்பிற்கும் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் பின்னர் ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள், வாகனத் தொடரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், தேர்தலின் பின்னர் அமைதியான சூழ்நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவிக்கின்றார்.

இந்த காலப்பகுதியில் ஒரேயொரு சம்பவத்தை தவிர மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் அமைதி நிலவுவதாக அவர் கூறினார்.

குறிப்பாக மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற விதம் குறித்து திருப்தியடைவதாகவும் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்