சேவை செய்யுமாறு மங்கள சவால்; கட்சியை அழிவுறச் செய்தவரின் சவாலை ஏற்க முடியாது – சஜித்

சேவை செய்யுமாறு மங்கள சவால்; கட்சியை அழிவுறச் செய்தவரின் சவாலை ஏற்க முடியாது – சஜித்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 10:23 pm

சேவை செய்து காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று சஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மங்கள சமரவீர நேற்று சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த சவாலை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக செயலுறு ரீதியில் செயற்பட வேண்டும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர கூறியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசறைல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68ஆவது மாநாட்டின் போது, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ள சஜித் பிரேமதாஸ அவருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என தான் எதிர்பார்ப்பதாக மங்கல சமரவீர நேற்று கூறினார்.

கட்சியை அழிவுற செய்து, அதன் சிறப்பான வரலாற்றை அறியாமலும் பெரும்பான்மை கட்சி ஆதரவாளர்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாமலும், செயற்படும் மங்கள சமரவீர போன்றவர்களின் சவாலை ஏற்றுக்கொள்ள தான் தயார் இல்லை என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது பிரேமதாஸ பரம்பரை தொடர்பிலோ உரிய வகையில் மதிப்பீடு செய்யாமல் குரோத மனப்பாங்குடன் மங்கள சமரவீர இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு பிரேமதாஸ குடும்ப உறுப்பினர்கள் செய்த அர்ப்பணிப்புக்களை சஜித் பிரேமதாஸ தனது அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.

காலஞ்சென்ற காமினி திசாநாயக்கவுக்கும் தனது தந்தைக்கும் இடையில் எந்தளவு பிரச்சினைகள் நிலவிய போதிலும் 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது தானும் தனது குடும்பமும் திசாநாயக்கவின் வெற்றிக்காகவும் கட்சியின் வெற்றிக்காகவும் செயற்பட்டமையை கட்சி ஆதரவாளர்கள் மறந்துவிடவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

பிரேமதாஸ ஜனாதிபதியின் நட்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையிலும், அவ் வேளையில், ஆட்சி பீடம் ஏறியிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அழிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு தலைமை தாங்கிய ஒருவரே மங்கள சமரவீர என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்தை திரிவுபடுத்தி அவரை மிஸ்டர் பீன் என அடையாளப்படுத்தி நாடு பூராகவும் போஸ்டர்களை ஒட்டி ஊடகங்கள் ஊடாக ரணிலுக்கு முடியாது என பிரசாரம் செய்தமை மற்றும் ஐக்கி தேசியக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதற்காக செயற்பட்டவரும் மங்கள சமரவீரவே என்பதை மறந்துவிட முடியாது எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் ஒருவராக முன் நிற்கின்றமை தெய்வாதீனமானன ஒரு விடயம் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அமைத்துக் கொண்ட அரசாங்கத்தை கலைக்காவிட்டால் நாட்டை விட்டுச் செல்வதாக அவ்வேளையில் ஜனாதிபதியாக இருந்தவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவரும் மங்கள சமரவீரவே என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் போது பெருந்திரளான மக்களை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை அந்த வருடம் நடத்த வேண்டும் என அழுத்தம் விடுத்த நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில்மறைவாகவும், வெளிப்படையாகவும் மங்கள சமரவீர செயற்பட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், எதிர்பாராத விதத்தில் ஜனாதிபதியினால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியில் இருந்து மங்கள நீக்கப்பட்டமையினால், செல்வதற்கு இடம் இன்றி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறும்போது உப பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த மங்கள சமரவீர 2008மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலின்போது எந்த தேர்தல் மேடைகளிலும் கட்சிக்காக குரல் கொடுக்கவில்லை என சஜித் பிரேமதாஸ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

[quote]2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயரை உள்வாங்கிக் கொள்வதற்கே மங்கள சமரவீர ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார். அதனை விடுத்து ஐக்கிய  தேசிய கட்சியின் மீதுள்ள பற்று காரணமாக அவர் இவ்வாறு செயற்படவில்லை. அரசியல் அகதியாக கட்சியில் இணைந்து கொண்ட மங்கள சமரவீரவுக்கு மாவட்டத்தில் இரண்டாம் இடமே கிடைத்தது. கடந்த மார்ச் மாதம்  இடம்பெற்ற மாகாண சபை தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளக்கூட அவரால் முடியவில்லை.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்