தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் (விபரங்கள் இணைப்பு)

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் (விபரங்கள் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 8:43 pm

இலங்கை தமிழரசுக் கட்சியில் இளம் சமூகத்திற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நேற்று முற்பகல் ஆரம்பமான பேராளர் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்ட 15 தீர்மானங்கள் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என சில பேராளர்கள் முற்பகல் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்றிரவு நிறைவுபெற்ற பொதுக் கூட்டத்தின்போது 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வடக்கு – கிழக்கு பகுதிகளிருந்து இராணுவம் வெளியேற வேண்டும், மீள்குடியேற்றப் பணிகள் பூரணப்படுத்தப்பட வேண்டும், ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் முதலிய  தீர்மானங்களை இலங்கை தமிழரசுக் கட்சி நேற்று நிறைவேற்றியுள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், இனப்பரம்பலில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடர்ந்தால் அஹிம்சை வழியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் முதலிய தீர்மானங்களும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள்
01. எமது இனத்தின் சுயநிர்ணய உரித்தின் அடிப்படையிலே பகிரப்படும் இறைமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் வன்முறை அற்ற சாத்தவீகமுறையில் வென்றெடுக்கும் வரை போராடுவோம் என எமது மக்களுக்கு உறுதி பூணுகின்றது.

02. அதிகூடிய அதிகாரப் பகிர்வு முறையொன்றின் அடிப்படையில் புதியதோர். அரசியலமைப்பின் மூலமாக இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலான பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு இந்த நாட்டில் உள்ள சகல தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கட்டமைப்புகளும் சக்திகளும் இன்னும் அனைத்து முற்போக்கு சக்திகளும் எம்மோடு இணைந்து செயற்பட வருமாறு மிகவும் அன்பாக அழைப்பு விடுக்க விரும்புகின்றோம். அத்துடன் சர்வதேச ஒப்பந்தமாகிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்தும் இலங்கை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதை இனிமேலும் இந்தியாவும் சர்வதேசமும் அனுமதிக்க கூடாது எனவும் முதன்மையாக அமுல்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாம் தீர்மானிக்கின்றோம்.

03. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் போரை நடத்துகின்ற போதும் அதற்கு பிறகும் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணை, மீள்குடியேற்றம் மீள்குடியேறியவர்களின் புனர்வாழ்வு அரசியல் தீர்வு சம்பந்தமாக உலகிற்கும் இந்தியாவிற்கு,  கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாமல் மாறாக எமது மக்களை அடக்கி ஒடுக்கி துன்புறுத்தி அவர்களது நிலங்களை அபகரித்து தமிழ் பிரதேசத்தை இராணுவ மயமாக்கி எமது பெண்கள் மீதும் பிள்ளைகள் மீதும் பாலியல் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்களின் இன கலாசார மத அடையாளங்களை அழித்து இராணுவத்தினரையும் பெரும்பான்மை இனத்தினரையும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவதை தவிர்த்து இது தேவையான ஒன்றாக செயற்படுத்த எடுக்கும் முயற்சிகளை இந்த மாநாட்டில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது சம்பந்தமாக இந்தியாவும், சர்வதேசமும் அவரச நடவடிக்கைகளை எடுத்து தமிழ் இனம் வடக்கு கிழக்கு தாயகபூமியில் இருந்து இல்லாது ஒழிக்கப்படுவதை நிறுத்தி இன ஒழிப்பில் இருந்து எம்மை காப்பாற்ற வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றோம்.

04. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானத்திற்காக அமெரிக்கா உட்பட்ட ஏனைய நாடுகளுக்கும் எமது புலம்பெயர்ந்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் இம் மாநாடு அதனால் உருவாக்கப்பட்ட சர்வதேச விசாரணை ஒழுங்காவும் முழுமையாகவும் நடந்தேற எமது உதவிகளை கொடுப்போம் என்றும் மக்களை தயங்காது சாட்சியமளிக்க முன்வருமாறும் அதற்கான வழிமுறைகளை நாம் அமைத்துக்கொடுப்போம் என்ற உறுதியையும் கொடுத்து உண்மை கண்டறியப்பட்டு அதன் மூலம் எமக்கு நீதியான தீ்ர்வொன்று கிடைப்பதற்கு அனைவரும் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதோடு கண்துடைப்புக்காக இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணைகளில் எமது மக்களுக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை என்பதனை திட்டவட்டமாக அறிவிக்கின்றது. உண்மை கண்டறியப்படுவதன் அடிப்படையில்தான் இந் நாட்டில் நிலையான சமாதானமும் உண்மையான நல்லிணக்கமும் உருவாக முடியும் என்பதனை எமது நாட்டின் சகல மக்களுக்கும் தாழ்மையாக அறிவிக்கின்றோம்.

05. எமது மக்களை அடக்குமுறைக்கள் உட்படுத்தி அவர்களை தமது நிலங்களுக்கு செல்ல முடியாது தடுத்து அந்த நிலங்கைள அபகரித்து அந்த சொத்துக்களை பறித்து எமது பெண்கள் மீதும் பிள்ளைகள் மீதும் வன்முறையயைக் கட்டவிழ்த்து விட்டு அரசியல் தீர்வென்றை ஏற்படுத்தாது வேணுமென்றே காலம் தாழ்த்தி எமது இனத்தின் இருப்பை அழிக்கும் செயற்பாட்டில் இருந்து அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள் மாறாவிட்டால் 2015ஆம் ஆண்டு தை திங்களில் இருந்து எமது இனத்தை பாதுகாப்பதற்கான மகாத்மா காந்தி வழி நின்று அஹிம்சை போராட்டத்தை நாம் ஆரம்பிப்போம் என்றும் அப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை நல்குமாறு எமது மக்களிடமும் இந்த நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குவாதிகளிடமும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்திடமும் அறைகூவல் விடுகின்றோம்.

06. போரின் இறுதியிலும் அதற்கு முன்பும் பின்பும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தும் இம் மாநாடானது இந் நிலைக்கு உரித்தானவர்கள் உடன் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு தமது உறவினர்களோடு சேர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் அரசிற்கும் சர்வதேச பொறிமுறைகளுக்கும் கோரிக்கை விடுக்க இம் மாநாடு விரும்புகின்றது.

போரினால் அங்கவீனமாக்கப்பட்டோர் உறவினர்களை இழந்தோர் இடம்பெயர்ந்தோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என இம் மாநாடு தீர்மானிக்கின்றது.

07. தமிழ் மக்கள் மீது பல கட்டங்களாக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை காரணமாகவும் போர்ச்சூழல் காரணமாகவும் எமது மக்கள் ஆயிரக்கணக்காக இடம்பெயர்ந்தும் அவர்களில் கணிசமானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இதன் விளைவாக அரசு குடியேற்ற திட்டங்கள் காரணமாகவும் தமிழ் மக்களது பிரதேசத்தில் இனப்பரம்பலும் குடிப்பரம்பலும் இன விகிதாசாரமும் பாரிய இளவில் குறைக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்திலும் இவ்வாறு சனத்தெகை குறைந்ததை சாட்டாக கொண்டு அம்மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இல் இருந்து 6 ஆக குறைந்திருக்கின்றது. இவை அசாதாரண செயற்கை காரணிகளின் விளைவாக மீண்டும் எமது மக்கள் தமது வாழ்விடங்களில் குடியேறும் வரை பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது என இம் மாநாடு தீர்மானிக்கின்றது.

அதேவேளை வலி வடக்கு சம்பந்தமாக உயர் நீதிமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டு அங்கு அபகரிக்கப்பட்ட நிலங்களில் எமது மக்கள் மீள்குடியேற உடனடியாக அனுமதிக்கப்பட்டு எமது பிரதேசத்தில் உள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகின்றது.

08. இலங்கையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இன, மத, மொழி அடிப்படையிலான சகியா தன்மையும் மாற்று இன, மொழி, மத கலாசாரங்களை வன்முறைக்கு உட்படுத்தி மத வழிபாட்டு தலங்களை தகர்த்து பெரும்பான்மை இனத்திற்கும் மதத்திற்குமே இந்த நாடு சொந்தம் என்ற தோரணையில் செயற்படும் பேரினனவாத சகத்திகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

09. மனிதாபிமானமற்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்றும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகள் மீள பெறப்பட்டு இச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் எல்லோருக்கும் மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கின்றது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வளமான வாழ்வை எதிர்காலத்தில் கல்வி வேலைவாய்ப்பு என்பன அளிக்கப்படவேண்டும் எனவூவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.

10. அரசாங்கத்தின் அசமந்த போக்கினாலும் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தும் திட்டங்களினாலும் வீழ்ச்சி அடைந்திருக்கின்ற தமிழர் தேசத்தின் பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டும் என இம் மாநாடு கோருகின்றது.

தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் அரசாங்கம் தொடர்ந்து பாராபட்சமாக நடந்து கொள்வதை கண்டிக்கின்றது. அரச நியமனங்களில் தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனர்.

இளைஞய சமுதாயத்தை சீரழிவான பாதையில் அரசு வழிநடத்துவதையும் கண்டிக்கின்றது. மதுபாவனை கட்டுப்பாடு போதைப்பொருள் கட்டுப்பாட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.

11. இலங்கையில் தற்போது நிலவி வரும் ஊடக அடக்குமுறை முற்றாக தவிர்க்கப்பட்டு அனைவருக்கும் கருத்து சுதந்திரமும் அரசை விமர்சிக்கும் உரித்தும் கொடுக்கப்படவேண்டும் என இம் மாநாடு தீர்மானிக்கின்றது.

(இது தவிர மேலும் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்