அழகுக்கலை நிலையத்தில் ஊசி ஏற்றப்பட்டதால் பெண் வைத்தியர் உயிரிழந்த சம்பவம்; நிமல் கமகேவுக்கு பிணை

அழகுக்கலை நிலையத்தில் ஊசி ஏற்றப்பட்டதால் பெண் வைத்தியர் உயிரிழந்த சம்பவம்; நிமல் கமகேவுக்கு பிணை

அழகுக்கலை நிலையத்தில் ஊசி ஏற்றப்பட்டதால் பெண் வைத்தியர் உயிரிழந்த சம்பவம்; நிமல் கமகேவுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 7:06 pm

பம்பலப்பிட்டியில் அழகுக்கலை நிலையமொன்றில் ஊசி ஏற்றப்பட்டதன் பின்னர் பெண் வைத்தியரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைதான வைத்தியர் நிமல் கமகேவுக்கு இன்று நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான வைத்தியர் கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு பிணையில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாவிலான நெருங்கிய உறவினர்கள் இருவரின் சரீரப் பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்தில் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அத்துடன் அழகுக்கலை நிலையத்திலுள்ள அனைத்து மருந்து வகைகள் மற்றும் கிறீம் மருந்து வகைகள் தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட வைத்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் சந்தேகநபருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

மாதந்தோறும் முதலாவது ஞாயிற்றுக்கிழமையன்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சந்தேகநபர் பிரசன்னமாக வேண்டும் என்றும் குறித்த நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வைத்திய தகைமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென சந்தேகநபருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்