வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பயணிக்கிறது ‘சக்தி சிரச நிவாரண யாத்திரை’

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பயணிக்கிறது ‘சக்தி சிரச நிவாரண யாத்திரை’

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 10:01 pm

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் முன்னெடுத்துள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு தொடர்ந்தும் மக்கள் மகத்தான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கொழும்பு இரண்டு பிரேபுறூக் பிளேசிலுள்ள வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைமையகத்தில் இன்று காலை பயணத்தை  ஆரம்பித்த வாகனத் தொடரணிகள் கிளிநொச்சி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன.

வாகனத் தொடரணிகள் பயணிக்கும் பிரதான வீதியோரங்களில் திரண்டிருக்கும் மக்கள் தொடர்ந்தும் நிவாரணப் பொருட்களை கையளித்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று நள்ளிரவு வேளையில் வாகனத் தொடரணிகள் கிளிநொச்சி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூன்று கட்டங்களாக இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் முதல் கட்ட வாகனத் தொடரணி நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம்,  அனுராதபுரம், வவுனியா ஊடாக கிளிநொச்சியை நோக்கி பயணிக்கின்றது.

இந்த வாகனத் தொடரணி தற்போது புத்தளம் நகரை சென்றடைந்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கே.எம்.ரசூல் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணியுடன் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீறங்காவும் இணைந்துள்ளார்.

சக்தி சிரச நிவாரண யாத்திரையின் மற்றுமொரு வாகன தொடரணி     பொலன்னறுவை பிரதேசத்தை நோக்கி பயணத்தை முன்னெடுத்துள்ளது.

பேலியகொடை, கிரிபத்கொட, கடவத்தை, யக்கல, வறக்காபொல, குருநாகல், தம்புளை ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தை சக்தி – சிரச நிவாரண யாத்திரை சென்றடையவுள்ளது.

அம்பாறையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிய வாகனத் தொடரணியும் இன்று காலை கொழும்பு பிரேபுறூக் பிளேசிலுள்ள வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைமையகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்ததது.

இந்த வாகனத் தொடரணி  களுத்துறை, அம்பலாங்கொட, காலி, மாத்தறை, தங்காலை, வீரவில, புத்தல ஊடாக அம்பாறையை சென்றடையவுள்ளது.

இந்த வாகனத் தொடரணியிடமும் மக்கள் தொடர்ந்தும் நிவாரணப் பொருட்களை வையளித்து வருகின்றனர்.

வரட்சியால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்களை சேர்க்கும் நடவடிக்கைகள் கடந்த மூன்று நாட்களாக மூன்று மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.

14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு பெருமளவிலான மக்கள் நிவாரணப் பொருட்களை கையளித்து மகத்தான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்