மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:50 am

மொனராகலை, படல்கும்புர பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் மேடையை அமைத்துக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொல்லுகளுடன் வருகைதந்த குழுவினர் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட சிலர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி இன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடைக்கு சேதம் விளைவித்த குழுவினர், ஆதரவாளர்களை தாக்கியதாக தகவல் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், குறித்த குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு வருகைதந்ததுடன், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும், சாட்சியங்கள் பதிவுசெய்யப்படுவதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் மேலதிக பொலிஸ் குழுக்கள் இரண்டு படல்கும்பர பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் படல்கும்புர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளங் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்