திருகோணமலையில் காணி அளவீட்டு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பினை அடுத்து கைவிடப்பட்டது

திருகோணமலையில் காணி அளவீட்டு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பினை அடுத்து கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 8:09 pm

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புல்மோட்டை அரிசிமலை கிராமத்தில் தொல்பொருள் திணைக்களத்திடம் பொறுப்பளிப்பதற்காக இனங்காணப்பட்ட சுமார் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கைவிடப்பட்டுள்ளது.

யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த மக்களை குறித்த பிரதேசத்தில் மீள்குடியேற்றம் நடவடிக்கை இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த அளவீட்டுப் பணிகளுக்கு அனுமதியளிக்க முடியாது என எதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.

தொல்பொருள்  திணைக்களத்தின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படும் பட்சத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அநீதி ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அரிசிமலை பகுதியிலுள்ள தமது காணிக்குள் செல்வதற்கு முயன்ற ஒருவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர் தற்போது புல்மோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அரிசிமலை பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும், அரச உத்தியோகத்தர்களும் வருகைதந்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மக்கள் மீள்குடியேற்றப்பட்டு அவர்களுக்கு சொந்தமான காணி வழங்கப்பட்டதன் பின்னரே காணி சுவீகரிப்புக்கான அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய காணி அளவீட்டுப் பணிகளுக்காக வருகைதந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களும் கலைந்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அரிசிமலை பகுதியிலுள்ள மக்களுக்கு சொந்தமான காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சில வர்த்தக நிலையங்களும் இன்று மூடப்பட்டிருந்தன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோது புல்மோட்டை பிரதேசத்திலுள்ள ஒருசில வர்த்தக நிலையங்கள் மாத்திரமே மூடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்