கூட்டமைப்பின் குண்டர்கள், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர் – ரில்வின் சில்வா

கூட்டமைப்பின் குண்டர்கள், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர் – ரில்வின் சில்வா

கூட்டமைப்பின் குண்டர்கள், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர் – ரில்வின் சில்வா

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:33 pm

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் சிலருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலருக்கும் இடையில் படல்கும்புர பகுதியில் ஏற்பட்ட மோதலையடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அறிவுரைகளை பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஷான் பெர்னாண்டோ வழங்கியுள்ளார்.

மேலுமொரு சம்பவம் அந்த பகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் தொடர்பான பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த சிலர் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது இடம்பெற்ற கற் பிரயோகங்களால் இரண்டு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வாவின் கையொப்பத்துடன் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மொனராகலை படல்கும்புர நகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான சட்ட அங்கீகாரத்துடன் மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பிரசன்னமாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குண்டர்கள், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டர்கள் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தமது ஆதரவாளர்களை துரத்திவிட்டு, அங்கிருந்த அலங்காரங்களை சேதப்படுத்தி, பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த மேடைக்கும் தீயிட்டுள்ளதாக ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

இந்த நிலைமை நீதியும் நியாயமுமான தேர்தலுக்கு பாரிய தடையாகும் என்பதுடன், சம்பவம் குறித்து விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மக்கள் விடுதலை முன்னணி பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்