நாட்டில் சீரற்ற வானிலையால் 322 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையால் 322 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையால் 322 குடும்பங்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 6:48 pm

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.

சீரற்ற வானிலைக் காரணமாக இதுவரையில் 322 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நில்வலா கங்கை , களு கங்கை, கிங் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் வான் பாயும் அளவிற்கு உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லக்ஸபான மற்றும் கெனியன் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலையால் காலி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடி வானிலை காரணமாக சேதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மொனராகலை கும்கனை பகுதியில் வீசிய கடும் காற்றினால் 10 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடி மின்னலால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியக்குமாரன் தெரிவித்தார்.

களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள நீடிக்கப்படவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

சீரற்ற வானிலைக் காரணமாக டெங்கு நுளம்பு பரவகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அதிக அவதானம் செலுத்தும் வலையங்களாக அடையாப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 40 வீதம் டெங்கு நோயாளர்களின் பதிவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சீரற்ற வானிலை தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் உரிய நேரத்திற்கு பரீட்சார்த்திகள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டார்.

எனவே, பரீட்சை தொடங்குவதற்கு சற்றுநேரத்திற்கு முன்னரே மாணவர்கள் பரீட்சை நிலையங்களை சென்றடையும் வகையில், தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்