வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 4:53 pm

வட மாகாண சபையில் ஆளுந் தரப்பினால் இன்று முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் சிலவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெற்றபோது ஆறு பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றுள் சபை உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த மூன்று பிரேரணைகள் இலங்கையின் அரசியல் யாப்பிற்கும், சத்தியபிரமாணத்திற்கும் முரணானவை எனத் தெரிவித்து வட மாகாண சபையின் 8 எதிர்கட்சி உறுப்பினர்களில் 7 பேர் வெளிநடப்பு செய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் எம் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரரணகள் தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரேரணைகள் வாபஸ் பெறப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

முதலாவது பிரேரணையை திருத்தங்களுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

எதிர்கட்சியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்ந்தும் சபையில் அமர்ந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஆளுங்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், கவனயீர்ப்பு நோக்குடன் தனது சகோதரனின் பாதுகாப்புடன் சைக்கிளில் வந்ததாக அனந்தி சசிதரன் இதன்போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்