எமது பொருளாதார வலயத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது -ராஜித

எமது பொருளாதார வலயத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது -ராஜித

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 9:05 pm

எந்தவொரு நாட்டிற்கும்  இந் நாட்டு  கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க இடமளிக்கப் போதில்லை என கடற்றொழில்  அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் திட்ட செயற்பாட்டு குழு  தலைவர்  சுப்ரமணியம் சுவாமி  நேற்று பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் குடாவில்  மீன் விருத்தி செய்வதற்கு  பல காலங்கள் செல்வதால் மூன்று வருடத்திற்கு  இந் நாட்டு கடற் பரப்பில் மீன் பிடிக்க இடைக்கிடை அனுமதி வழங்குமாறு சுப்ரமணிய சுவாமி கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில்  அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்த கருத்து:-

“30 ஆண்டுகள் துன்பங்களை அனுபவித்து தற்போது தான் எமது மீனவர்கள் கடலுக்கு சென்று வருமானத்தை பெற்றுக் கொள்கின்றனர்.  எதிர்காலத்தில் 50 வீதமாக அதிகரிப்பதே எமது வேலைத்திட்டமாகும்.

ஜனாதிபதி எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் கடந்தாண்டு டிசெம்பர் மாதமாகும் போது
23 வீதமாக மும்மடங்கால் அதிகரிக்க முடிந்தது. இன்னும் ஓரிரு வருடங்களில் 50 வீத இலக்கை அடைவோம்.

இதற்கு இருக்கும் பாரிய தடையாக இந்திய மீனவர்களின் வருகையே காணப்படுகின்றது. ஆகவே எவருக்கும் எமது கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க இடமளிக்க போதில்லை.

அவ்வாறு வர விரும்புகின்றவர்கள் எமது நாட்டுடன் கலந்துரையாடி முதலீட்டு நடவடிக்கைகள் மீது வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது இந்திய மீனவர்களுக்கு  எமது கடலை திறந்து விட முடியாது.

எமது பொருளாதார வலயத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்