ஐ.நா விசாரணையாளர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது –  ஜனாதிபதி

ஐ.நா விசாரணையாளர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

ஐ.நா விசாரணையாளர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 9:22 am

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஐ.நா விசாரணையாளர்களுக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க விசா வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச செய்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்செயல்கள் அல்லது காணாமற்போனோர் தொடர்பான விடயங்கள் குறித்த விசாரணைகள் உள்ளூர் அதிகாரிகளாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே ஐ.நாவின் விசாரணைகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கூறியுள்ளமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, விசாரணைகள் தேவை எனக் கருதுவோரே அது குறித்து அதிக கரிசனை செலுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவிக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிலையங்களுக்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கு மேலும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அவ்தாஷ் கௌஷல் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் இடைக்கால அரசின் சட்ட அமைச்சரும் சர்வதேச சட்ட வல்லுநருமான அஹமர் பிலால் சூஃபி ஆகியோர் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்