15 மொழிகள், 15,000 திரையரங்குகள் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஐ’

15 மொழிகள், 15,000 திரையரங்குகள் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஐ’

15 மொழிகள், 15,000 திரையரங்குகள் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஐ’

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 10:52 am

இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மிகப் பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது ‘ஐ’.

ஜூலை 2012ல் தொடங்கப்பட்ட நாள் முதலே இப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்படத்தின் இசை வெளியீடு, பிரம்மாண்டமான வெளியீடு திட்டம் என பல்வேறு செய்திகள் இணையத்தில் வலம் வருகிறது.

ஐ படத்தைப் பற்றி படத்துடன் நெருக்கமானவர் ஒருவர் சொன்ன தகவல்கள்:-

‘ஐ’ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் PATCH WORK எனப்படும் சிறு காட்சிகள் மட்டுமே இன்னும் காட்சிப்படுத்த இருக்கிறது. மற்றபடி மொத்த படப்பிடிப்பும் முடிந்தாகிவிட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி, என இந்திய மொழிகள் மட்டுமன்றி சீன மொழியையும் சேர்த்து, மொத்தம் 15 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனால் அனைத்து மொழி டப்பிங் பணிகளும் ஒன்றின் பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. விரைவில் சீன மொழி டப்பிங் தொடங்கவிருக்கிறது. சீன மொழியில் டப்பிங் செய்யப்படும் முதல் தமிழ் படம் இது தான்.

இப்படத்திற்காக சுமார் 30 நாட்கள் அதிக சிரமப்பட்டு ஒரு சண்டைக் காட்சியை சீனாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அளவில் இந்த சண்டைக்காட்சி பேசப்படும் என்கிறார்கள். அதுமட்டுமன்றி, சீனப் படங்களே இதுவரை படப்பிடிப்பு நடத்தாத இடங்களுக்கு எல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

விக்ரம் இப்படத்தில் ஒப்பந்தமான போது 70 கிலோ இருந்தார். முதலில் முழுக்க உடம்பு ஏற்றி 130 கிலோ வரை எடையைக் கூட்டி, நடித்தார். பிறகு அப்படியே எடையைக் குறைத்து 50 கிலோவிற்கு வந்து, முக்கிய காட்சிகளில் நடித்திருக்கிறார்.

150 கோடியைத் தாண்டிய பட்ஜெட் என்பதால், இப்படத்தை சுமார் 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்திய அளவில் அதிக திரையரங்கில் வெளியிடும் முதல் படம் ‘ஐ’

உலக அளவில் சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் இருக்கிறது. அங்கு, ஹொலிவுட் படங்களை விட அதிகமாக, சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஐ’

சென்னை, ஹைதராபாத், மும்பை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறது இப்படத்தை தயாரித்து வரும் ஆஸ்கர் நிறுவனம்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, சென்னையில் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்து வருகிறார்கள். ‘தசாவதாரம்’ படத்திற்கு ஜாக்கி சான் வந்ததது போல, ‘ஐ’ இசை வெளியீடு விழாவிற்கு பில் கிளிண்டன் மற்றும் அர்னால்டு ஸ்வாஸர்நெகர் ஆகியோரை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது ஆஸ்கர் நிறுவனம்

கோடி கோடியாக கொட்டி படம் எடுத்தாலும், அப்படத்தின் எந்த ஒரு விழாவிலும் தயாரிப்பாளர் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் கலந்து கொள்வதில்லை. ‘ஐ’ பட விழாவிலும் கலந்து கொள்ளப்போவதில்லையாம்.

ஒரு காட்சிக்காக விக்ரமிற்கு மேக்கப் போட்டிருக்கிறார்கள். அந்த மேக்கப் போட்டால், முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் தான் விக்ரம் இருக்க வேண்டும். வெளியே வந்தால் மேக்கப்பில் உள்ள அசிட் உருகி தோல் எல்லாம் உரிந்து விடும். மேக்கப் போடும் முன், காட்சி என்ன என்பதை எல்லாம் விளக்கி விடுவார் இயக்குனர் ஷங்கர். படப்பிடிப்புக்கு தயாரானதும், காட்சி ரெடி என்றவுடன் விக்ரம் வெளியே வந்து நடித்து விட்டு, உடனடியாக திரும்பவும் உள்ளே சென்றுவிடுவார். அப்படியிருந்தும், விக்ரமிற்கு ஒரு நாள் தோல் உரிந்து விட்டது. அந்தளவிற்கு விக்ரமின் உழைப்பு இந்தப் படத்தில் இருக்கிறது.

படம் மிகத் தரமாக தயாராகியுள்ளது. ‘ஐ’ வெளியானவுடன் தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ‘ஐ’க்கு முன், ‘ஐ’க்கு பின் என பிரிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறது படக்குழு.

சமீபத்தில் வெளியான ஒரு முன்னணி நடிகரின் படத்தின் முதல் பிரதிக்கு ஆன செலவு 45 கோடி. ஆனால், ‘ஐ’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் செலவே கிட்டத்தட்ட 45 கோடிக்கு வருகிறது. இயக்குநர் ஷங்கர் வேலைகளில் துல்லியம் பார்ப்பவர் என்பதால், இது செலவு அல்ல, தரமான படத்திற்கான முதலீடு என்கின்றனர்.

இந்தப் படத்தின் டீஸரைப் பார்த்தவர்கள், ‘ஐ’ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம், இப்படத்தை ஹொலிவுட் படங்களுக்கு நிகராக எடுத்திருக்கிறீர்கள். ஏன் நீங்கள் உலகளவில் ஹொலிவுட் படங்கள் மாதிரி வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், தமிழிலும் ​ஹொலிவுட் படங்கள் போன்று தயாரிக்கப்படுகிறது என்று அனைவரும் அறிவார்கள் என்று கூறியுள்ளார்கள். சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியிட இது ஊக்கப்படுத்தியுள்ளது.

இப்படத்தின் மேக்கப், பெரிதும் பாராட்டப்படும். கிராஃபிக்ஸில் செய்ய முடிந்தாலும், அதைத் தவிர்த்து மேக்கப்பில் கவனம் செலுத்தி விக்ரமை உருமாற்றியிருக்கிறார்கள். முழுக்க மேக்கப் மூலமாகவே விக்ரமை மிரட்ட வைத்திருக்கிறார்கள். மேக்கப்பிற்காகவே இன்னொரு முறை பார்க்கும் அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

மற்ற படங்களைப் போல் இல்லாமல், இந்தப் படத்தை மாதம், திகதி குறிப்பிட்டு அன்று வெளியீடு என்று கூற முடியாது. அவ்வளவு பணிகள் இருக்கிறது. இந்த படம் வெளியாகும் திகதியில், மற்ற சின்ன படங்கள் எதுவுமே இதோடு போட்டியிடாது. காரணம், இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு மிக மிக மிக அதிகம்.

ஹொலிவுட் படங்கள் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதை “ச்சே.. எப்படி எடுத்திருக்கான்” என்ற கமென்ட் வரும். அது போல ஹொலிவுட்காரர்கள் பார்த்து மிரளப் போகும் முதல் இந்திய படமாக ‘ஐ’ இருக்க பாடுபட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் எப்போதுமே தன்னுடைய ஒரு படத்தை மிஞ்சுவது போல, தனது அடுத்த படம் இருக்க வேண்டும் என்று மெனக்கிடுவார். ‘ஐ’யை மிஞ்சும் அளவிற்கு ஷங்கரின் அடுத்த படம் எடுக்க சிரமப்படுவார் என்கிற அளவிற்கு வந்திருக்கிறதாம் ‘ஐ’. 3 வருடங்களாக முழுமையாக தன்னை ‘ஐ’க்கு அர்ப்பணித்திருக்கிறார் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம் இருவருக்குமே இப்படம் மைல் கல் தான். இருவரையுமே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் படமாக ‘ஐ’ இருப்பது உறுதி.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்த படங்களில் இது தான் உச்சபட்ச செலவில் தயாரான படம். ‘ஐ’ படத்திற்காக இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமாக வாரி இறைத்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அப்பாடல் காட்சியில் முழுவதும், விக்ரம் சிறப்பு மேக்கப் போட்டு, நடனமாடி இருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல இப்படத்தில் விக்ரமின் உழைப்பிற்கு இப்பாடல் ஒன்றே போதும்.

Source : tamil.thehindu


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்