தனியானதொரு நாட்டை நிறுவும் நோக்கமில்லை;  த.தே.கூ சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய இணக்கம்

தனியானதொரு நாட்டை நிறுவும் நோக்கமில்லை; த.தே.கூ சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய இணக்கம்

தனியானதொரு நாட்டை நிறுவும் நோக்கமில்லை; த.தே.கூ சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2014 | 10:18 pm

இலங்கை ஒருமைப்பாடுடைய ஒரு நாடு எனவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாவை சேனாதிராஜா மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டு 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான, ரோஹினி மாரசிங்க மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயமொன்றை ஆட்சேபித்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தனியானதொரு நாட்டை நிறுவும் உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவை சேனாதிராஜா மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகிய சட்டத்தரணிகள், தங்களின் கட்சிக்காரர்கள் இந்த நாட்டை ஒருமைப்பாடுடைய ஒரு நாடாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் அவர்களிடம் இல்லையெனவும், தேர்தல் விஞ்ஞானம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் காரணங்களை முன்வைத்துள்ளனர்.

இந்தக் காரணங்களை விசேட சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதுகுறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் என இதன்போது மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்