இறுதி சமர் இன்று; கிண்ணம் யாருக்கு?, முல்லருக்கு தங்கக் காலணி கிடைக்குமா?

இறுதி சமர் இன்று; கிண்ணம் யாருக்கு?, முல்லருக்கு தங்கக் காலணி கிடைக்குமா?

இறுதி சமர் இன்று; கிண்ணம் யாருக்கு?, முல்லருக்கு தங்கக் காலணி கிடைக்குமா?

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 4:01 pm

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்  20ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ஜேர்மனி, ஆர்ஜன்டீனா அணிகள் மோதுகின்றன

இந்தப் போட்டி பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவிலுள்ள மரக்கானா மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

உபாதைக்குள்ளான ஆர்ஜன்டீனாவின் டி மரியா இந்த  போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அரையிறுதியில் பிரேஸில் அணியினை வெற்றிக் கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற ஜேர்மனி அணியில், எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிப் பெறுவதற்காக ஆர்ஜன்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸிக்கு முன்னாள் வீரர் டியாகோ மரடோனா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மெஸியின் பங்களிப்பு மிக அவசியம் என மரடோனா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 1986உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப் போட்டியில் வெற்றியீ்ட்டியதைப் போன்று இன்று நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றிப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆர்ஜன்டீனா அணியின் பயிற்றுவிப்பாளர் அலியேன்ட்ரோ செபெலா தெரிவித்துள்ளார்.

1986ஆம் ஆண்டில் அணியில் டியாகோ மரடோனா பிரகாசித்ததைப் போன்று இம்முறை போட்டிகளில் லயனல் மெஸி சிறந்த தலைவராக செயற்படுவார் என செபெலா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவை நனவாக்குதற்காக தமது அணி வீரர்கள் தயாராகவுள்ளதாக ஜேர்மனி அணியின் தலைவர் பிலிப் லாம் தெரிவிக்கின்றார்.

இம்முறை கிண்ணத்தை கைப்பற்றி தமது நாட்டிற்கு கொண்டு செல்லும் இலக்குடனேயே இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆர்ஜன்டீனா கால்பந்தாட்ட அணியினை குறைத்து மதிப்பிட முடியாது என ஜேர்மனி அணியின் பயிற்றுவிப்பாளர் வக்கீம் லோவ் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கிண்ண போட்டியில் ஜேர்மனி, அர்ஜென்டீன அணிகள்  6 தடவைகள் மோதியுள்ளன.

இதில் ஜேர்மனி 3 போட்டிகளிலும், ஆர்ஜன்டீனா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டில் உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜேர்மனி பிரேசிலிடம் தோல்வியடைந்தது.

தற்போது 12 ஆண்டுக்குப் பின்னர் ஜேர்மனி அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதெவேளை 1930 ஆம் ஆண்டில் முதன் முறையாக கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்ற அர்ஜன்டீனா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பின்னர்  1978, 1986 ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை கைப்பற்றய ஆர்ஜன்டீனா, 1990இல் இறுதிப் போட்டி வரை முன்னேறிய போதிலும் ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது.

தற்போது  24 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜன்டீனா அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் அண்டில் நடைபெற்ற உலக்கிண்ண தொடரில் மாரடோனா தலைமையில் களமிறங்கிய அர்ஜன்டீனா, கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த தொடரில் மரடோனா 5 கோல்களை அடித்ததுடன்  தொடரில் அர்ஜன்டினா அணி மொத்தமாக 14 கோல்களை  பெற்றது.

இம்முறை மெஸி தலைமையில் களமிறங்கிய ஆர்ஜன்டீனா  இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதில் மெஸ்சி மொத்தமாக 4 கோல்களை பெற்றுள்ளதுடன்  தொடரில் அர்ஜன்டீனா அணி இதுவரை 8 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 20 ஆவது உலக்கிண்ண தொடரில் இதுவரை 5 கோல்களை அடித்துள்ள ஜேர்மனியின் தோமஸ் முல்லர் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார்.

இன்றைய போட்டியில் இவர் இரண்டு கோல்கள் அடிக்கும் பட்சத்தில் இந்தத் தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரராக பதிவாவதோடு, தங்கக் காலணியையும் தன்வசமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு முல்லருக்கு கிட்டவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்