இராணுவம் காணிகளை பிடிக்கின்ற பகற் கொள்ளையர்களை போல செயற்படுகிறது; மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு

இராணுவம் காணிகளை பிடிக்கின்ற பகற் கொள்ளையர்களை போல செயற்படுகிறது; மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 9:54 pm

தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், இலங்கை தழிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 25ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவுதின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாவை சேனாதிராஜா இந்நிகழ்வில் உரையாற்றினார்.
[quote]மக்களுடைய தீர்ப்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை. ஜனநாய தீர்ப்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை. மக்களுடைய அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இந்த பிரதேசங்களை இராணுவமயப்படுத்தி இராணுவம் எங்கு சென்றாலும் பார்த்த இடங்களில் எல்லாம் காணி பிடிக்கின்ற பகல் கொள்ளைக்காரர்களை போல இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதரவாக இருக்கின்ற ஒருவரைத்தான் அந்த இராணுவ வாசனையோடு இருப்பவரைத்தான் போர்க்குற்றக்கார போர் இயங்கிய காலத்திலே தளபதியாக இருந்து செயற்பட்ட ஒருவரைத்தான்
மீண்டும் மீண்டும் இந்த அரசுக்கு தேவையாக எங்களுடை பகுதியிலே மீண்டும் ஆளுநராக நியமித்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலும் அப்படித்தான் ஒருவரை நியமித்திருக்கின்றார்கள். எவ்வளவு தூரம் எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோமோ அது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.[/quote]

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின், சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் சிற்றம்பலமும் உரையாற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்