டெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக  நடவடிக்கை

டெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

டெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 9:06 am

டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த 189 வீட்டு உரிமையாளர்களுக்கு நேற்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி சுட்டிக்காட்டுகின்றார்.

கொழும்பு வடக்கிலுள்ள அனைத்து நகர பிரிவுகளிலுமுள்ள வீடுகள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக  கொழும்பு மாநகர சபையின் பிரதம  சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதன்போது 18 ஆயிரத்து 191 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்காக 600 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், ஒவ்வொரு குழுவிலும் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவரும், இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவர் வீதமும்  உள்ளடக்கப்பட்டிருந்ததாக டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இந்த குழுவினர் வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவாக சூழல் காணப்படுகின்றதா என சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.

இதன்போது டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 189 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.

மழை நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பீலிகள் மற்றும் வடிகாண்களிலேயே நுளம்புகள் அதிகளவில் பெருகுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை, இன்றைய தினம் மத்திய கொழும்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஜிந்துப்பிட்டி, கொச்சிக்கடை, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக டொக்டர் ருவன் விஜேமுனி மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்