உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பிவைப்பு

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பிவைப்பு

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பிவைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 8:49 am

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தனியார் பரீட்சாத்திகளுக்கான  அனுமதிப்பத்திரங்கள் அவர்களால் குறிப்பிடப்பட்ட விலாசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறுகின்றார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 197 பாடசாலை பரீட்சாத்திகளுக்கும், 62 ஆயிரத்து 166 தனியார் பரீட்சாத்திகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த அனுமதிப்பத்திரங்களை அதிபர்கள் தாமதமின்றி பரீட்சாத்திகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உரிய தினத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த போதிலும், அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காத தனியார் பரீட்சாத்திகள், தமது  விண்ணப்பத்தின் பிரதியொன்றையும், பரீட்சைக்  கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதியொன்றையும், பரீட்சை கட்டணம் செலுத்தப்பட்டது என தபால் நிலைய பொறுப்பதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் அனுப்பியமைக்கான பற்றுச்சீட்டின் பிரதி  என்பவற்றுடன் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதிப்பத்திரங்களில் பாட மாற்றம், மொழி மாற்றம் அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், தனியார் பரீட்சாத்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டு பிரிவிற்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாவிடின் 0112 78 44 22 என்ற தொலை நகல் இலக்கத்தின் ஊடாக இது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், 0112 78 42 08 அல்லது  0112 78 45 37 ஆகிய இலக்கங்களின் ஊடாக பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டு பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 120  நிலையங்கள் மற்றும் 295 இணைப்பு நிலையங்களின் கீழ் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்